Srija Venkatesh

Srija Venkatesh

மேகமே தூதாக வா! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

மேகமே தூதாக வா என்னும் இந்த நாவல் சுரேஷ் என்னும் இளைஞனின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.

அவனது கனவுகள் லட்சியங்கள் எல்லாமே நடுத்தர வர்க்கத்திலிருந்து விடுபட்டு பெரும் பிசினஸ் மேனாக வேண்டும் என்பதே.

அதற்குத்தான் எத்தனை தடங்கல்கள்?

எப்போதும் தாய்ப் பாசம் பெரிதாகப் பேசப்படுகிறது. ஆனால் சில தாய்கள் தங்கள் மகள்களின் மேல் உள்ள பாசத்தில் மகன்களின் மன வருத்தத்தையும், அவர்களது உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களது தேவை எப்போதும் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதற்கு மகன் துணை நிற்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதனால் மகன் மனதில் இருக்கும் ஆசைகளைக் கூட அவர்கள் பொருட் படுத்துவதில்லை. அப்படி ஒரு தாய் தான் சுரேஷின் அம்மா.

அக்கா சிவகாமியின் பொறாமை ஒருபுறம், அவள் கணவன் வாசுவின் பொறுப்பற்ற தன்மை ஒரு புறம் என சுரஷின் வாழ்க்கை பந்தாடப்படுகிறது.

அப்போது தென்றல் போல வந்தவள் தான் விஜி. இவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஆனால் அது நிறைவேறுமா?

சுரேஷின் கனவான பிசினஸ் தொடங்குவது மெய்ப்படுமா?

இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் "மேகமே தூதாக வா..." நாவலை. படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

 

மலருக்குத் தென்றல் பகையானால்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

டீனேஜ் எனப்படும் பதின் பருவம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சோதனையான காலம். அந்த நேரத்தில் தான் ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். வீட்டில் இருக்கும் பெற்றோர் அவர்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற வேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால் என்ன ஆகும்? எனச் சொல்கிறது எனது அடுத்த நாவலான "மலருக்குத் தென்றல் பகையானால்...".

தனுஜா பள்ளியில் படிக்கும் இளம் பெண். அவளது வீட்டின் நிலை ஏன் சரியில்லை? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்பதையெல்லாம் யோசித்துக் குழம்பி, வெளியில் ஆறுதல் தேடுகிறாள். தோழி மீரா கூடப் பகையாகத் தெரிகிறாள் ஒரு கட்டத்தில். தனுஜாவின் அந்த நிலையைப் பயன் படுத்தப் பார்க்கிறான் ஒரு கயவன்.

இறுதியில் தனுஜா என்ன ஆனாள்? அவளது எதிர்காலம் என்ன ஆகும்? அவளது தாய் தனது தவற்றை சரியான நேரத்தில் உணர்ந்து கொண்டாளா?

இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளப் படியுங்கள் புதிய நாவல் "மலருக்குத் தென்றல் பகையானால்.." உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

 

நெருப்பில் கரையும் பனித்துளிகள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நெருப்பில் கரையும் பனித்துளிகள் திருமணமாகாத ஒரு இளம்பெண் தவறு இழைத்ததால் அவள் குடும்பமே நசிந்து போனதைப் பற்றிப் பேசுகிறது.

தன் தங்கையை ஏமாற்றியக் கயவன் பணக்காரன் என்பதால் அவனைப் பழி வாங்க அண்ணன் குமாரும் அவனது நண்பன் ஆனந்தும் தொழில் ஆரம்பிக்கிறார்கள். எப்படியாவது தங்கையை ஏமாற்றியவனின் கம்பெனியை விலைக்கு வாங்கி அவனை நடு ரோட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே குமாரின் லட்சியம் கனவு எல்லாமே!

அதில் அவன் வெற்றி கண்டானா? அவனது பழிக்கு ஆளான தினேஷ் என்னவானான்? குமாருக்குக் காதல் வருமா?

இப்படிப் பல கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல்.

விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டிருக்கிறது "நெருப்பில் கரையும் பனித்துளிகள்" என்ற இந்த நாவல்.

காதலென்னும் பொன்னூஞ்சல்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தீபா என்ற இளம் பெண்ணைச் சுற்றி நெய்யப்பட்டுள்ளது இந்த நாவல். அவளது மன உணர்வுகளைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் அவளது காதலைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது காதலென்னும் பொன்னூஞ்சல் நாவல். இன்னமும் நம் நாட்டில் பல பெண்களுக்கு இரக்கம், அனுதாபம் போன்ற உணர்வுகளே காதலின் அடிப்படையாக அமைகின்றன. ஆனால் அவை உண்மையான காதலாகுமா?

காதலிலும் விட்டுக்கொடுத்தல் வேண்டும் தான். ஆனால் சுயகௌரவமே இல்லாத அளவுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தால் என்ன செய்ய?  கதிரின் நடவடிக்கைகள் பிடிக்கவேயில்லை என்றாலும் பொறுத்துப் போகும் படி சொல்கிறது அவளது மனசாட்சி. ஆனால் அதே நேரத்தில் இன்னொருவனோடு இருக்கும் போது சுதந்திரமாகவும் சௌகரியமாகவும் உணர்கிறாள் தீபா. இது என்ன மாதிரியான உணர்வு? கதிர் சரியில்லை என வேறொருவனிடம் காதல் கொள்கிறோமோ? இது சரியா? தான் தவறிழைக்கிறோமோ? என பலப்பல குழப்பங்களின் சிக்கித் தவிக்கிறாள் நம் கதாநாயகி தீபா. அவளது தோழி அனிதா பக்க பலமாக இருக்கிறாள். இறுதியில் தீபா என்ன முடிவு எடுக்கிறாள்?

படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன் வாசகர்களே! இதோ உங்களுக்காக "காதலென்னும் பொன்னூஞ்சல்".

வானவில்லே! வண்ண மலரே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

பதின் பருவத்தில் செய்த ஒரு தவறு எப்படி வாழ்க்கை முழுமைக்கும் பாதிக்கும் என்பதைக் கூறுகிறது "வானவில்லே! வண்ண மலரே" என்னும் இந்த நாவல்.

நிச்சயம் இதைப் படிக்கும் பதின் பருவ குழந்தைகள் கட்டாயம் இரு முறை எந்த முடிவும் எடுப்பதற்கு முன் யோசிப்பர்கள். தாய் மகள் உறவு, அண்ணன் தங்கை உறவு என பல உறவுகளைப் பற்றிப் பேசும் இந்த நாவல் கீதா என்ற பெண்ணின் துயரக் கதையை ஆண் மகன் ஒருவன் மனது வைத்தால் எப்படி மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.

வாழ்க்கையில் காதலும் திருமணமும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நட்பு. கீதாவின் இனிய தோழி மாலதி போல நமக்கும் கிடைக்கமாட்டார்களா? என ஏங்க வைக்கும் நட்பைப் பற்றிச் சொல்கிறது "வானவில்லே! வண்ண மலரே!" . தியாகமே வாழ்க்கையாக வாழும் சில தாய்மார்களின் கதையைக் கூறுகிறது. மொத்தத்தில் நமது சமூகத்தில் ஆங்காங்கே ஊடாடும் சில பெண்களையும் ஒரு சில ஆண்களையும் அவர்களது உணர்வுகளையும் வைத்து பின்னப்பட்ட கதை. படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே!

Page 2 of 5